STCK : பங்கு அருட்பணியாளர்கள்

பங்கு அருட்பணியாளர்கள்

கண்டன்விளை பங்கின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முழுமுதற்காரணமாக இருந்தவர்கள், அங்கு மிகுந்த அர்ப்பணத்துடன் பணியாற்றிய அருட்தந்தையர்களும் அவர்களுடன் ஒத்துழைத்த பங்கு இறைமக்களும்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. கண்டன்விளை பங்கு காரங்காடு பங்கின் கிளைப்பங்காக இருந்தபோது அருட்தந்தையர் மூவர் பணியாற்றியுள்ளனர்.


1. அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா (1927 - 1931)

அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா அவர்கள் 1927 - முதல் 1931 - ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்கள். அன்னாருடைய பணிக்காலத்தில் 1927 - ஆம் ஆண்டுதான் புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. திருப்பயணிகள் வசதிக்காக சாலை ஓரத்தில் ஒரு குருசடியும் கட்டப்பட்டது. மக்களின் தேவையை நிறைவு செய்ய ஒரு சத்திரம் (சாவடி) கட்டவும் கிணறு வெட்டவும் பங்குத்தந்தை இல்லம் அமைக்கவும் மக்களை ஊக்கப்படுத்தினார்.



2. அருட்தந்தை. வற்கீஸ் (1931 - 1934)

1931 முதல் 1934 - ஆம் ஆண்டு வரை பணியாற்றிய அருட்தந்தை. வற்கீஸ் அவர்களுடைய காலத்தில், ஆலயத்தின் வடக்குப் பகுதியில் மணிக்கோபுரம் கட்டப்பட்டு அதில் புனித குழந்தை இயேசு தெரசாவின் உடன் பணியாற்றிய கார்மல் சபை அருட்சகோதரிகள் பிரான்ஸ் நாட்டிலிருந்து அனுப்பித்தந்த இரு மணிகளும் நிறுவப்பட்டன.




3. அருட்தந்தை. D.C. ஆன்றனி (1934 - 1944)

1934 முதல் 1944 - ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த அருட்தந்தை. D.C. ஆன்றனி அவர்களின் காலத்தில் பெரியவர்களுக்கு மாதா சபை, கிறிஸ்தவ வாழ்வு சமூகம் என்ற பக்த சபைகளும், சிறாருக்கு நற்கருணை வீரர் சபையும் தொடங்கப்பட்டன. அவரே புனித தெரசா பள்ளிக்கான கட்டடத்தையும் எழுப்பினார். அவர் பணிக்காலத்தில் மிகச் சிறந்த சாதனை, பொதுக்கல்லறைத் தோட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ததே ஆகும். அவரது இப்பணி முழுமைபெற திரு. பாக்கியநாதன் என்பவர் ஆண்டிச்சிவிளை என்ற பெயர் கொண்ட நிலத்தைக் கல்லறைத் தோட்டத்திற்காக நன்கொடையாகக் கொடுத்து உதவினார்.





இதுகாறும் கிளைப்பங்காக இருந்த கண்டன்விளை, 1944 - ஆம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்தின் ஒரு பங்காக நிலை உயர்வு பெற்றது. தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தையர்களின் உழைப்பால் கண்டன்விளை பல துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது.



1. அருட்தந்தை. V.J. ஸ்டீஃபன் (1944 - 1949)

தனிப்பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளை பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. V.J. ஸ்டீஃபன் பொறுப்பேற்றார். அவரது பணிக்காலத்தில் ஒரே கல்லாலான உயர்ந்த கொடிமரம் நிறுவப்பட்டது. அவரே சாலையோரத்தில் அமைந்திருக்கும் கோபுரக் குருசடிக்கு அடிக்கல் நாட்டினார். இவரது காலத்தில் அமைக்கப்பட்ட லூர்து அன்னை கெபியும் பவனிக்காக தேர்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டதும் என்றும் நினைவுகூரத்தக்கவை.



2. அருட்தந்தை. J. பயஸ் மோரிஸ் (1949 - 1963)

1949 முதல் பணிப் பொறுப்பேற்ற அருட்தந்தை. J. பயஸ் மோரிஸ் அவர்கள் 14 ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். அவர்கள் ஜெபமாலை மலைக்கான சொத்துக்களை வாங்கிச் சேர்த்தார். இம்மலையில் மரியன்னையின் பக்தர்கள் வந்து ஜெபிக்கத் தொடங்கினர். தற்பொழுதுள்ள அருட்சகோதரியர் இல்லம், கைத்தறி நெசவாலை இருக்கும் இடம் ஆகியவையும் தந்தையவர்கள் வாங்கியவையே. மரியாயின் சேனை பிரசீடியம் தொடங்கியதும் ஆலயத்தின் மின் இணைப்புப் பெற ஏற்பாடுகள் செய்ததும் தந்தையவர்களின் சிறப்புச் செயல்பாடுகளாகும்.


3. அருட்தந்தை. L. சேவியர் இராஜமணி (1963 - 1964)

1963 முதல் 1964 வரை அருட்தந்தை. L. சேவியர் இராஜமணி அவர்கள் பங்குத்தந்தையாகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.






4. அருட்தந்தை. பெனடிக்ட். J.R. அலெக்ஸாண்டர் (1964 - 1967)

1964 முதல் 1967 - ஆம் ஆண்டு வரை பணியாற்றிய அருட்தந்தை. B.J.R. அலக்சாண்டர் அவர்களின் பெருமுயற்சியால் அருட்தந்தை. V.J. ஸ்டீபன் ஆரம்பித்து வைத்த கோபுரக் குருசடிப் பணி முடிக்கப்பட்டு 1967 - ஆம் ஆண்டு டிசம்பர் 12 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. ஒவொரு வாரமும் ஆசிரியர்களுக்கு மறைக்கல்விப் பயிற்சியும், மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மறைக்கல்வி பயில வகுப்பில் புதிய போதனை முறைகளும் யுக்திகளும் புகுத்தப்பட்டன.



5. அருட்தந்தை. M. சூசை மைக்கேல் (1967 - 1968)

1967 முதல் 1968 வரை ஓராண்டு மாடதட்டுவிளை பங்குத்தந்தையாக பணியாற்றிக்கொண்டிருந்த அருட்தந்தை. M. சூசைமிக்கேல் அவர்களின் கண்காணிப்பில் கண்டன்விளைப் பங்கு செயல்பட்டுவந்தது.





6. அருட்தந்தை. M. மரிய கிரகோரி (1968 - 1972)

1968 முதல் 1972 வரை பணியாற்றிய அருட்தந்தை. M. மரிய கிரகோரி அவர்கள் ஆலயத்தின் விரிவாக்கத்திற்கு அடித்தளமிட்டர்கள். ஜெபமாலை மலைக்குச் செல்லும் வழிக்கான இடத்தை வாங்கி, வழியும் அமைத்தார். ஆலயத்தில் ஒலிபெருக்கி வசதியையும் ஏற்படுத்தினார். சதா சகாய அன்னையின் நவநாளையும் ஆரம்பித்தார். முதல் நற்கருணை விருந்தில் பங்குபெறும் சிறாருடன் பெற்றோரும் பங்கெடுக்க கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளையும் செயல்படுத்தினார். உடல் நலக்குறைவின் காரணமாக 1972 - இல் ஓய்வு பெற்றார்.


7. அருட்தந்தை. N.J. ஜார்ஜ் (1972 - 1973)

அருட்தந்தை. M. மரிய கிரகோரி அவர்கள் நோய்வாய்ப் பட்டதனால், பங்கின் பொறுப்பை ஒரு வருட காலத்திற்கு அருட்தந்தை. N.J. ஜார்ஜ் (1972 - 1973) அவர்கள் ஏற்றுச் சிறப்பாக செயல்பட்டார்.





8. அருட்தந்தை. C.F. வென்சஸ்லாஸ் (1973 - 1976)

தொடர்ந்து பங்கின் பணிப்பொறுப்பினை ஏற்ற அருட்தந்தை. C.F. வென்சஸ்லாஸ் அவர்களின் பணிக்காலத்தில் (1973 - 1976) பங்கின் மேலாண்மைக் குழு, ஆரம்ப சுகாதார மையம், கூட்டுறவுச் சங்கம் முதலியன ஏற்படுத்தப்பட்டன. அதோடு, வின்சென்ட் தே பவுல் சங்கமும் தோற்றுவிக்கப்பட்டது.





9. அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ் (1976 - 1980)

1976 - ஆம் ஆண்டு முதல் அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ் அவர்கள் பங்குத்தந்தையாகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள். அவர்களுடைய காலத்தில்தான் ஆலய தலைவாயிலின் விரிவாக்கமும் கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டு 1979 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. பங்கு மேய்ப்புப்பணிப் பேரவை அலுவலகம், கைத்தறி சங்கக் கட்டடம், அருட்சகோதரியர் இல்லம், அம்பர் நூற்பு மையம், மழலையர் பள்ளி முதலியன கட்டி முடிக்கப்பட்டன. தந்தையவர்கள், வேலைக்கு உணவு (food for work) திட்டத்தின் கீழ் ஏழைகள் பலருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். குளங்களை தூர்வாரியும், கிணறுகளைப் புதுப்பித்து குடிநீர் பிரச்சனைகளுக்கு முடிவு கண்டார். காஞ்சிரங்குளத்தின் கரையில் அமைந்துள்ள கிணறு இப்படி அமைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலயத்தின் பொன்விழாவைக் கொண்டாடி பொன்விழா மலரையும் வெளியிட்டார்.


10. அருட்தந்தை. M. அருள் தேவதாசன் (1980 - 1985)

அருட்தந்தை. M. அருள் தேவதாசன் அவர்களுடைய பணிக்காலத்தில் மறைமாவட்ட சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு பங்கு மேய்ப்புப்பணிப் பேரவை அமைக்கப்பட்டது. இக்காலத்தில் தான் தற்போதுள்ள பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டு 1982 - ஆம் ஆண்டு அக்டோபர் 3 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.





11. அருட்தந்தை. V. ஹில்லாரியஸ் (1985 - 1987)

அருட்தந்தை. V. ஹில்லாரியஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஜெபமாலை மலையில் அன்னையின் திருச்சொரூபம் அடங்கிய கெபியும் அமைக்கப்பட்டது. ஆலயம் சிறப்புற ஒளிர்ந்திட குழல் விளக்குகள் பொருத்தப்பட்டன.






12. அருட்தந்தை. A. இயேசு மரியான் (1987 - 1989)

அருட்தந்தை. A. இயேசு மரியான் அவர்களின் பணிக்காலத்தில் மறைக்கல்வி மறுமலர்ச்சி கண்டது. கோடை விவிலிய வகுப்புகள் தொடங்கப்பட்டன. வழிபாடுகள் வாழ்வாகிட முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1988 - ஆம் ஆண்டு மே மாதம் 5 -ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்ட வழிகாட்டுதலின் படி தேர்தல் அடிப்படையில் முதல் பங்கு மேய்ப்புப்பணி பேரவை அமைக்கப்பட்டது.





13. அருட்தந்தை. M. அருள் (1989 - 1992)

அருட்தந்தை. M. அருள் அவர்கள் தம் பணிக்காலத்தில், கண்டன்விளையில் சிறப்பாக செயல்பட்டுவரும் கத்தோலிக்க சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சிறுமலர் கலையரங்கத்தைக் கட்டி முடித்தார். பண்டாரவிளையில் அமைந்துள்ள புனித குழந்தை தெரசாள் தொடக்கப் பள்ளிக்கும் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.





14. அருட்தந்தை. S. சாலமன் (1992 - 1995)

1992 - 1995 வரை பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை. S. சாலமன் அவர்கள் மக்களின் தாராள மனதைத் தட்டி எழுப்பி நன்கொடைகளைப் பெற்று ஆலயத்தின் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களைக் கட்டி முடித்து 1994 - ஆம் ஆண்டு செப்டம்பர் 23 - இல் அர்ச்சிப்பு விழாவும் நடத்தினார். அவரது பணிக்காலத்தில், ஜெபமாலை மலையில் சிற்றாலயம் கட்டுவதற்கான அடிக்கல்லும் நடப்பட்டது. மேலும், பங்குப் பேரவையினர், பங்குமக்கள் மற்றும் பங்குத்தந்தை ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆர்வத்தால் 1995 - இல் நவநாள் யூபிலி விழா கொண்டாடப்பட்டது.



15. அருட்தந்தை. G. ஜஸ்டஸ் (1995 - 1996)

1995 முதல் 1996 வரை அருட்தந்தை. G. ஜஸ்டஸ் அவர்கள் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்கள்.







16. அருட்தந்தை. B. ரசல்ராஜ் (1996 - 1997)

1996 முதல் 1997 வரை பணிபுரிந்த அருட்தந்தை. B. ரசல்ராஜ் அவர்கள் திருத்தூதுக் கழகங்களைப் புதுப்பித்து பங்கின் முகத்தை புதுப்பிக்கத் திட்டமிட்டார். பங்கின் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை அமைத்தார். ஜெபமாலை மலைக்குச் செல்லும் பாதையோரத்தில் திருச்சிலுவைப் பாதையின் 14 நிலைகளையும் நிறுவினார்.

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் விண்ணகப் பிறப்பின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட திட்டங்கள் தீட்டினார். இவ்விழாவின் நினைவுச் சின்னமாக அமைக்க விரும்பியதுடன், தூய தெரஸ் அரங்கத்திற்கான அடிக்கல் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு. லியோன் A. தர்மராஜ் அவர்களால் இடப்பட்டது. நல்லுள்ளம் கொண்ட பலரும் தாராளமாக நன்கொடைகள் வழங்கினர். மண்ணின் மைந்தர்களில் ஒருவரான அருட்தந்தை. M. பீட்டர் அவர்களும் அரங்கத்தின் பயன்பாட்டிற்கான மின்சமனி (Generator) ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்கள்.


17. அருட்தந்தை. S. இயேசுரெத்தினம் (1997 - 2001)

1997 - இல் பங்கின் பொறுப்பை ஏற்ற அருட்தந்தை. S. இயேசு ரெத்தினம் அவர்கள் தம் விடா முயற்சியால் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்று தெரஸ் அரங்கின் தரைத்தளத்தைக் கட்டி முடித்து 1999 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 - ஆம் நாள் அர்ச்சித்தார். தரை ஓடாக இருந்த ஆலயத்தின் தரைதளம் ரூ. 3,30,000/- செலவில் பளிங்குத்தரையாக மாற்றம் கண்டது.

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் விண்ணகப் பிறப்பின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் நினைவாக விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. இதுநாள் வரையிலும் தொடக்கப் பள்ளியாக இருந்த புனித தெரசா ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளியாக உயர்தப்பட்டதோடு வகுப்புக்களில் கணினிப் பாடமும் புகுத்தப்பட்டது. நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான கூடுதல் கட்டடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பங்கில் அடித்தள கிறிஸ்தவ சமூகத்தை முறையாக வளர்த்திட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஏழை மாணவர்களின் கல்விக்கான நிதி திரட்டப்பட்டது. மண்ணின் மைந்தர்களில் ஒருவரான அருட்தந்தை. J. எல்ஃபின்ஸ்டன் அவர்கள் ஏழைகளின் கல்வி நிதிக்காக பெருந்தொகை நன்கொடையாக தந்து உதவினார்.


18. அருட்தந்தை. F. மரியமிக்கேல் (2001 - 2003)

2001 - ஆம் ஆண்டு அருட்தந்தை. S. இயேசு ரெத்தினம் அவர்கள் முளகுமூடு வட்டார முதல்வராக பணி உயர்வு பெற்றுச் சென்ற பின் கண்டன்விளை பங்கின் பொறுப்பை அருட்தந்தை. F. மரியமிக்கேல் ஏற்றுக்கொண்டார். இவர் தெரஸ் அரங்கின் 2 -ஆம் தளத்தைக் கட்டும் பணியைத் தொடர்ந்தார். இப்பணி 2002 - இல் நிறைவு செய்யப்பட்டு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு. லியோன் A. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அருட்தந்தை. F. மரியமிக்கேல் அவர்களின் பெருமுயற்சியால் பங்கில் கலைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 2003 - ஆம் ஆண்டு ஏப்ரல் 7 - ஆம் நாள் கோட்டாறு ஆயர் இல்லத்திலிருந்து தீபம் கொண்டுவரப்பட்டு பவள விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்றித்திருப்பலி நிறைவேற்றப்பட்டு நினைவு மலரும் வெளியிடப்பட்டது.



19. அருட்தந்தை. S. வின்சென்ட் ராஜ் (2003 - 2006)

2003 - ஆம் ஆண்டு பங்கின் பொறுப்பை ஏற்ற அருட்தந்தை. S. வின்சென்ட் ராஜ் அவர்கள் ஜெபமாலை மலைப் பணியினைத் தொடர்ந்து நடத்தி சிற்றாலயத்தையும் கட்டி முடித்தார். சிற்றாலயம் 2005 - ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 - ஆம் நாள் கோட்டாறு ஆயர் மேதகு. லியோன் A. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் இச்சிற்றாலயத்தில் காலை 6:15 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது. தூய தெரஸ் யூடிகா மருத்துவமனை கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. பங்கு மக்களின் நலனுக்காகாகச் சிறுசேமிப்புத் திட்டம் ஓன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது.




20. அருட்தந்தை. R. ஐசக்ராஜ் (2006 - 2012)

அருட்தந்தை. R. ஐசக் ராஜ் அவர்கள் 2006 - ஆம் ஆண்டில் பங்கின் பொறுப்பை ஏற்றார்கள். அவர்கள் பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையுடன் இணைந்து ஆலயத்தின் கூரையைப் புதுப்பிக்க, 2007 - இல் திட்டமிட்டார்கள். நல்லுள்ளம் கொண்ட மக்கள் தாராளமாக நன்கொடை கொடுத்து உதவினர். எனவே, ஓட்டுக்கூரை உலோகக் கூரையாக மாற்றம் பெற்று, 2008 - ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவு பெற்றது. ஆலயத்தின் பீடமும் ஒரு புதிய சிற்பியின் உதவியுடன் மெருகேற்றப்பட்டு புதிதாக்கப்பட்டது.

ஆலய மைதானத்திலிருந்து தெரஸ் அரங்கின் முதல் தளத்திற்கு நேரடியாக நுழையும் பொருட்டு புதிய சரிவுத்தளமும் பாதையும் அமைக்கப்பட்டது. அத்துடன், தூய தெரஸ் அரங்கிலுள்ள சமையல் பிரிவானது சமையல் எரிவாயு வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஜெபமாலை மலைக்குச் செல்லும் பாதையில் ஜெபமாலை மறையுண்மைகள் இருபதும் நிறுவப்பட்டன.



21. அருட்தந்தை. J.R. பேட்ரிக் சேவியர் (2012 - 2015)

அருட்தந்தை. J.R. பேட்ரிக் சேவியர் அவர்கள் 2012 முதல் 2015 வரை பங்குத்தந்தையாக மிகச் சிறப்பாகப் பணியாற்றி 2015 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 - ஆம் நாள் வேறு பங்கிற்கு மாற்றம் பெற்றார். அவர்கள் ஆலய வளாகத்தில் சுமார் ரூ.60,00,000/- செலவில் ஆங்கில வழி பள்ளி (மழலையர் பள்ளி) ஒன்றை நிறுவினார்கள். அது 200 மாணாக்கர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ரூ.7,21,744/- செலவில் 15 சென்ட் நிலம் வாங்கி ஏற்றத்தாழ்வாக இருந்த ஜெபமாலை மலை சிற்றாலயச் சுற்றுப்புறத்தைச் சமப்படுத்தி மதிற்சுவரும் கட்டினார்கள். ஊர்மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆலய வளாகத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி ஒன்றையும் நிறுவினார். ஜெபமாலை மலைக்குச் செல்லும் நுழைவாயிலில் ரூ.3,00,000/- செலவில் கல்குருசடி ஒன்றும் கட்டப்பட்டது.



22. அருட்தந்தை. K. ஜார்ஜ் (2015 - 2016)

2015 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 - ஆம் நாள் பங்குத்தந்தையாக அருட்தந்தை. K. ஜார்ஜ் அவர்களும் அவருடன் இணைப்பங்குத்தந்தையாக அருட்தந்தை. V. பெனிட்டோ அவர்களும் பொறுப்பேற்றார்கள். இவர்கள் இருவரும் ஒருவருட காலம் பங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

அருட்தந்தை. V. பெனிட்டோ (இணைப் பங்குத்தந்தை, 2015 - 2016)

இவர்களுடைய பணிக்காலத்தில், சிறார் பாடகர் குழு ஓன்று உருவாக்கப்பட்டது; இது சிறார்களுக்கு வழிபாட்டில் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க ஒரு கருவியாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் பதிலுரைப்படல்களை பாடும்போது அதிலுள்ள இறைவார்த்தைகளை தங்கள் வாழ்நாள் வரைக்கும் நினைவில்கொண்டு அதன்படி வாழ பாடகற்குழு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

மேலும், அருட்தந்தையர்கள் இருவரும் பங்கில் இயங்கி வரும் டெக்கீஸ் குழுவினருக்கு திருவிழா நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியின் போதும், 2015 - ஆம் ஆண்டு டெக்கீஸ் குழு தயாரித்து வெளியிட்ட குழந்தை இயேசுவின் புனித தெரேசா மற்றும் கண்டன்விளை ஆலய வரலாறு அடங்கிய ஆவணக் குறும்பட வெளியீட்டுக்கும் உறுதுணையாக இருந்தனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலயத்தில் சிறப்பு ஜெபமாலை, நவநாள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறைமக்களிடம் இறையாண்மையை மிகச் சிறப்பாக நிறுவினர். அத்தோடு, பங்கில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கத்தோலிக்க சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சிற்றாலயத்தின் அருகாமையில், பியாத்தா திருவுருவச் சிலையையும் நிறுவினர். பங்கு பணிமாற்றம் காரணமாக 2016 - ஆம் ஆண்டு மே மாதம் 23 - ஆம் நாள் பங்குப் பொறுப்பை அருட்தந்தை. W. சகாய ஜஸ்டஸ் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

23. அருட்தந்தை. W. சகாய ஜஸ்டஸ் (பங்குத்தந்தை, 2016 முதல்)

அருட்தந்தை. W. சகாய ஜஸ்டஸ் அவர்கள் 2016 - ஆம் ஆண்டு மே மாதம் 22 - ஆம் நாள் பங்கின் பொறுப்பை ஏற்றார்கள். அவர்கள் பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையுடன் இணைந்து பங்கை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.


அருட்தந்தை. M. ஸ்டீஃபன் ராஜ், SDS., (இணைப் பங்குத்தந்தை, 2017 - 2018)

அருட்தந்தை. M. ஸ்டீஃபன் ராஜ் அவர்கள் 2017 - ஆம் ஆண்டு மே மாதம் 21 - ஆம் நாள் பங்கின் இணைப் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பங்குத்தந்தையுடன் இணைந்து பங்குப் பணிகளை மிகச் சிறப்பாக செய்துவந்தார். பணி மாற்ற நிமித்தம், 2018 - ஆம் ஆண்டு மே மாதம் 23 - ஆம் நாள், மற்றொரு பங்கிற்கு பங்கு அருட்பணியாளராக நியமிக்கப்பட்டார்.